ஓராண்டு காலம் கடந்ததடா...
உன் நினைவுகள்
எம் நெஞ்சில் பதிந்ததடா...!
காலதேவன் கனவு பழித்ததடா...
உன் வரவு காணாது
எம் விழி துடித்ததடா...!
தலைமகனாய்...
தடம் பதித்தாய்.
தங்கமகனாய்...
துளிர் விரித்தாய்.
தாய் தந்தை - எம்
உறவைத் தரிசித்தாய்.
உன் உடன்பிறப்பை...
அன்பால் அரவணைத்தாய்.
அனு என்ற உன் நாமம்
அணையாது ஏழேழு ஜென்மம்.
அமைதியாய் வாழ்ந்த எம் இல்லம்
அனுக்குட்டி நீ.... இல்லாது ஏதடா இன்பம்.
அன்புத் தெய்வமே...
அந்தி வானம் கூட
உன் இழப்பைத் தாங்காது
கண்ணீர்த் துளிகளாய்ப் பொழிகிறது.
பத்துத் திங்கள் - நீ
பத்திரமாய்க் கருவறையில்.
பார்த்துப் பார்த்துப் பூரிப்படைந்தது
எம் இதயக் கனவுகள்.
பத்தொன்பது வயதில் - உன்னைப்
பார்த்தோமே கல்லறையில்.
பாதி உயிர் உன்னோடு போனது
மீதி உயிர் நடைப் பிணம் ஆனது.
அன்னை என் பிறந்த தினமன்று
கட்டி அணைத்துச் சென்ற நீ...
தந்த பரிசு உன் உயிரோ...
தங்கத் தலைமகனே...!
இனிவரும் - என்
பிறந்த தினம் எல்லாம்
இடிந்து நொருங்கப் போகின்றது
என் இதயம் அல்லவா....?
இளமையில் - பல
கனவுகள் சுமந்திருப்பாய்.
இன்பமாய் - அதில்
நனைந்திருப்பாய்.
துன்பமாய்ப் போகும் - என
எமக்குத் தோன்றவில்லையே.
துன்னலர் உன்னைத் தாக்கும் போது
துப்புக்கூட யாரும் தரவில்லையே.
பிரமன் எழுதிய விதியா...!
பழகிய நண்பர் செய்த சதியா...!
விழிகளில் பதிந்த உன் நினைவுகள்
விலகாது....என்றும் அணையாது.
எம் குலத்தின் குலவிளக்கே...
உன் ஆத்மா சாந்தியடைய
உனக்காய்த் தினமும் உருகி வேண்டும்
உன் உறவுகள் உடன் பிறப்புக்கள்...!!!
நன்றி
ரஞ்சிதா இந்திரகுமார்
------------------------------------------------
(ஈழமகள் உங்கள் அபிசேகா.)
தமிழாசான் பதிவேடு விருது 2019
6 ஆண்டுகள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக